May 29, 2017

மீரான் மைதீனின் ‘கவர்னர் பெத்தா’ : மனம் நெரிக்கும் நினைவுகள்

பொறுப்புகளும் அவற்றின் பக்கக் கிளைகளென நீளும் மன அழுத்தங்களும்தான் நம்மை இருக்கவும் விடுவதில்லை பறக்கவும் விடுவதில்லை என்றால் யார்தான் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவற்றில் மூழ்கியோ மூழ்கியதிலிருந்து எழுந்த நினைவுகளிலிருந்தோ விடுபட முனைந்து வெற்றியோ தோல்வியோ தழுவுவது அவரவர்பாடாயிருக்கிறது.

கவர்னர் பெத்தா தொகுப்பை ஓரிரு மாதங்களுக்கு முன்பு வாங்கியிருப்பேன். அவ்வப்போது புத்தகத் தலைப்பு கண்ணில் படும்போதெல்லாம் பெரியம்மா ஒருத்தர் பெரும் பொறுப்பிலிருந்தோ அல்லது அதிகாரத் தோரணையினாலோ கவர்னர் என்று அழைக்கப்படுகிற கதையாயிருக்கும் என்றுபட்டிருக்கிறது. நேற்றைய போது தொகுப்பை வாசித்தபோதுதான் தெரிந்தது. பத்தே பத்து கதைகள் கொண்ட அழகிய தொகுப்பு என்பதும், பீர்மா பெத்தாவுக்குக் கவர்னர் பெத்தாவென்று பேர் வந்ததற்குக் காரணம் நாம் நினைத்ததில்லை என்பதும். இவையெல்லாம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எழுதிய கதைகள் என்கிறார் மீரான் மைதீன்.

அசன் கண்ணாப்பா கதையில் வருகிற கண்ணாப்பாவும் ஓட்டு கதையில் வருகிற ஷாபியின் உம்மம்மாவும் எண்பதுகளில் கிராமப்புறங்களில் குழந்தைகளாயிருந்தவர்களின் தாத்தா பாட்டிகள். கண்ணாப்பா மாதிரியான தாத்தா எனக்கு இல்லை என்பதும் உம்மம்மா மாதிரி கோமதிப்பாட்டி இருந்ததும் ஞாபகம் வந்தது. வெறும் கையும் காலுமே முடுக்கி ஓட்டும் வாகனமாய்க் கொண்டு வாயால் ஒலியெழுப்பி ஓடிய காலத்துக்குள் தள்ளிவிடுகின்றன இக்கதைகள்.

தெருவிலுள்ள சின்னப் பிள்ளைகள் ரசிக்க ரசிக்கக் கதை சொல்வதே தனது முதுமைக்கும் தனிமைக்குமான துணையும் சக்தியுமென இருந்த அசன் கண்ணாப்பாவை விட்டு, சின்னப் பிள்ளைகள் விலகிச் செல்ல அவர் எப்போதும் பெருமை பேசிவரும் பேரனே காரணமாகிவிடுகிறான். அவன் அரேபியாவிலிருந்து வாங்கிவந்த டிவி பெட்டி பிள்ளைகள் பெரியவர்களென எல்லாரையும் விழுங்கிவிடுகிறது. சீந்துவாரற்றுப் போய்விடுகிற கண்ணாப்பாவின் ஆற்றாமையும் புலம்பலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கால நகர்வினாலும் அறிவியல் வளர்ச்சியினாலுமான சில எந்திரங்களின் ஈர்ப்பின் முன் கண்ணாப்பாவோ அவர் பேரனோ சின்னப்பிள்ளைகளோ யார்தான் என்ன செய்யமுடிகிறது.

ஷாபிக்கும் அவனது உம்மம்மாவுக்குமான பிரியத்தைச் சொல்லித் தொடங்கும் கதை ஓட்டு’. ஆனால் அப்படியே போய்விடவில்லை. பள்ளியில் சேர்ந்த பிறகான அவனது கவனப்பாடு மாறும் திசையில்தான் கதை நகர்கிறது. பெரியவர்களது கட்சி அரசியல் மற்றும் தேர்தல் நடத்தைகள் என்பவை பிள்ளைகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பகடி செய்கிறது. பிள்ளைகளின் தேர்தல் களமும் தேர்தல் முறையும் பார்ப்பது நமக்கு கலகலப்பாக இருந்தாலும் கூடவே ஒரு பெருமூச்சும் வருவதை உணராமல் இருக்கமுடியாது.

மனம் பேதலித்துவிட்ட பால்ய கால நண்பனைப் பார்க்கக் கதைசொல்லி செல்கிற கணங்களும் அவன் குறித்த இளம் நினைவுகளுமாக பிணைந்து முயங்குகிற கதை யூசுப்’. கதையோட்டம் எனக்கு இரு நினைவுகளைக் கிளர்த்திற்று. குணசீலம் கோவிலை ஒட்டிய சுற்றிலும் வேலி கட்டிய மண்டபத்தில் சங்கிலியில் கட்டப்பட்ட காலோடு கிடந்த இளைஞன் ஒருவனுக்கு, ஒரு இளம் தம்பதி வாழைப்பழத்தை வீசி எறிந்து வேடிக்கை பார்த்ததும், அவன் அதை அப்படியே எடுத்து தோலோடு கடித்துத் தின்றதும் ஒன்று. ஏர்வாடி தர்காவினுள்ளே நுழைவாயிலை அடுத்து இடதுபுறமுள்ள ஒரு மண்டபத்தில் புர்க்கா அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி அரபி மந்திரம் எழுதப்பட்டிருந்த உள்ளறைச் சுவரின் மீது ஓடிச் சென்று மோதுவதும், பின் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்படியே வெளியே ஓடி வந்து கர்ணமடித்து மணலில் விழுவதுமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது மற்றொன்று. மௌனே... எம் புள்ளையைப் பாத்தியா?’ எனக் கேவும் யூசுப்பின் உம்மா குரல் எங்கெங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி கேவக்கூட ஒரு ஜீவனும் இல்லாதவர்களும் இருப்பார்கள்.

மூன்று பெண்களைப் பெற்று வளர்த்து கட்டிக்கொடுத்து, வரிசையாய் மாற்றி மாற்றிப் பிரசவம் என்று கவனித்துத் தேய்ந்து போகும் அஸ்மா – மொய்து சாகிபின் ஆற்றாமைகளையும் நில்லா ஓட்டங்களையும் சொல்கிற கதை சம்மந்தக்குடி. மூத்த மாப்பிள்ளையின் உம்மா என்கிற  ஜபர்தஸ்தால் சம்பந்திகளைக் கிறங்கடிக்கவேண்டும், பெண்டு பிள்ளைகளை விட்டு அரேபியாவிலேயே மகன் இருந்து மாதச் சம்பளத்தைத் தன் பெயருக்கு அனுப்பினால் போதும் என்றிருக்கிற சலீமின் உம்மாவும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஓரிரு மாதம் வரவும், தன் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சற்றே வளரந்த பின்னே முதல்முதலாய்ப் பார்க்கவுமாக வாய்க்கிற சலீமும், கருவுற்ற காலத்து மனைவியின் எளிய ஏக்கங்களைக் கூட மென்று முழுங்கியே கண்ணால் மட்டும் காட்ட முடிகிற ஜெரினாவும் பொருளீட்ட வேண்டி அரேபியா செல்கிற பலர் வீட்டு மாந்தர்கள்.

ஊர்விட்டு ஊர்வந்து பள்ளிவாசல் ஒன்றில் மோதியாராக இருக்கிறார் காதர் சாகிபு. ஒவ்வொரு வேளை உணவும் ஒவ்வொரு வீடு என்றும் பள்ளிவாசல் வராந்தாவே வசிப்பிடம் என்றும் ஆகிவிட்ட அவர் மீது  அவ்வூர்க்காரர்கள் காட்டும் இளக்காரமும் சீண்டலும் இலேசுப்பட்டதல்ல. அவர் படுக்கவென வாய்த்த பெஞ்சுகள்தான் அவ்வூரில் யாரொருவர் மௌத்தாகிப் போனாலும் கிடத்தப் பயன்படுபவை. ஆகவே அவருக்குப் படுக்கையும் நிச்சயமில்லை, உறக்கமும நித்தியமில்லை. ஏதோ நாலு காசு சேர்த்து ஊரிலிருக்கும் தன் பெண்ணை கொஞ்சம் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தால் போதும் என்று அனைத்தையும் தாங்கிக்கொண்ட காதர் சாகிபு, ஒரு கட்டத்தில் இங்கிருந்து போனால் போதும் என்று நினைத்தாலும் போகமுடியாமல் போகிறது. பொருளாதார வலுவற்ற ஒரு மனிதரின் கதை பெஞ்சு’.

பீர்மா பெத்தாவுக்கு அவரது வயதொத்த சினேகிதிகளுடனான பேச்சும் கிண்டலும் அத்தனை பிடித்தமானது. அவர்கள் ஊர் தர்காவுக்குக் கவர்னர் பாத்திமா பீவி வருகிறார் என்ற சேதி வந்ததும் ஊரே சுறுசுறுப்பாகிறது. அதிகாரிகள் பறக்கிறார்கள். சாலை மின்கம்பங்கள் சரியாகின்றன. பீர்மாவோ கவர்னரைப் பார்க்கவென்றே மகனிடம் புதுத்துணி கேட்டு மகன்-மருமகளிடம் கிண்டலுக்கு ஆளாகிறார். ஆனால் யாரும் நினைக்காத நேரத்தில் பீர்மாவின் கைபிடித்துக் குலுக்கிவிட்டுச் செல்கிறார் கவர்னர். அதனால் ஊர்க்காரர்களிடம் கவர்னர் பெத்தாவாகிவிட்ட பெருமையை மீறி தனது உம்மா – வாப்பாவின் மீது கோபம் வருகிறது. பொட்டப்புள்ள படிச்சு பெரிய கவர்னராட்டா ஆகப்போறான்னு நம்மளப் படிக்கவைக்காம உட்டுட்டுதுவோஎன வைகிறார். இக்கதையின் தலைப்பாக மட்டுமின்றி இத்தொகுப்பின் தலைப்பாகவுமாகிவிட்ட கவர்னர் பெத்தா இதன்மூலம் இன்னொரு அர்த்தம் தருகிறது.

எளிய சொற்களில் உரிய காட்சிப்படுத்தலோடு மிகைப்பாடு ஏதுமின்றி இயல்பாய்ப் போகின்றன மீரான் மைதீனின் இக்கதைகள். கதை மாந்தருக்கும் வாசகருக்குமான அணுக்கமும் அதனால் எழும் பிணக்கமும் நேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆத்துனாச்சி பெத்தாவையோ ஹமீது சாகிபையோ எங்கேனும் பார்த்தால் நாலு வார்த்தை கேட்காமல் போகமாட்டேன். இக்கதைகளில் மண்ணையும் மொழியையும் மக்களையும் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. மொழி அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. நினைவோட்டங்களும் நம் மனதுக்குள் சொல்லிக் கொள்வது போலவே இருக்கின்றன. வெகு நாட்களுக்குப் பின் மனதுக்கு நெருக்கமாக உணரச் செய்த தொகுப்பு இது. மீரான் மைதீன் வாழ்த்துக்குரியவர்.

-          -  யுவபாரதி மணிகண்டன்            29/05/2017


(கவர்னர் பெத்தா – மீரான் மைதீன் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ.100/-)

3 comments:

Yaathoramani.blogspot.com said...

கதைக் களமும் நீங்கள் பாங்காய்
விமர்சித்த விதமும் அவசியம்
இந்தக் கதைகளைப் படிக்கவேண்டும்
எனும் ஆவலைத் தூண்டிப் போகிறது
அவசியம் படித்து விடுவேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yuvabharathy Manikandan said...

நன்றி ரமணி

Yuvabharathy Manikandan said...
This comment has been removed by the author.