February 15, 2014

செட்டி, பாலி – சில குறிப்புகள்



செட்டி எனும் சொல் தமிழகத்தில் வணிகக் குலத்தாரைக் குறிக்கிறது. தமிழ் பேசும் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனும் தனவணிகர், வாணியர் எனும் எண்ணெய் வணிகர், பட்டினவர் எனும் மீனவர்களில் வணிகம் செய்யும் பிரிவினர் மட்டுமின்றி, தெலுங்கு பேசும் ஆரிய வைசியர் எனும் கோமுட்டிகள், பேரி வைசியர், 24 மனைக்காரர், தேவாங்கர் எனும் ஆடைவணிகர் உள்ளிட்டோரும் செட்டியார் பட்டம் பூணுகின்றனர். இன்னும் பலகுலத்தாரும் இருக்கக் கூடும். எனினும் செட்டி என்றதுமே செட்டியார், செட்டி மக்கள், செட்டி நாடு என முதலில் அடையாளம் பெறுவது நகரத்தார் குலமே.



நகரத்தார் குலம் தொடர்பான தொல்கதைகளும், இன்று அவர்கள் செட்டி நாடு என அறியப்படும் புதுக்கோட்டை – காரைக்குடிப் பகுதிகளுக்குக் குடிவரும் முன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்ததாகவே சொல்கின்றன. பூவந்திச் சோழன் என்பான் நகரத்தார் குலத்தில் வலிந்து பெண் கொள்ள முயன்றதாகவும், அதை அவர்கள் மறுக்கவே அவர்களுக்கும் அவர்தம் உடைமைகளுக்கும் பெரும் சேதம் விளைவித்ததாகவும் குறிப்பிடுகின்றன. அதைத் தடுக்கவியலாத தருணத்தில் 1502 ஆண்குழந்தைகளை மட்டும் குலகுருவான அந்தணர் ஒருவர் வசம் ஒப்புவித்த 8000 தனவணிகர்களும், தத்தம் பெண்டிரோடு தீ புகுந்து உயிர்துறந்ததாகவும், பின்னர் அந்த ஆண்குழந்தைகள் வளர்ந்ததும் குலவிருத்தியின் பொருட்டு வேளாளர் குலப் பெண்களைத் திருமணம் செய்ததாகவும் குறிப்பிடுகின்றன.

சிலப்பதிகாரத்தின் தலைமக்களும் புகார் நகரத்தைச் சேர்ந்தவர்களுமான கோவலனும் கண்ணகியும் தனவணிகர் குலத்தவரே என்பதும், அவர்களது தந்தையர் முறையே மாசாத்துவனும் மாநாய்கனும் என்பதும் அறிந்ததே. (வணிகக்?) குழு எனும் பொருள்படும் சாத்து எனும் இப்பெயர், இன்றும் நகரத்தார் சமூகத்தில் சாத்தப்பன், சாத்தம்மை என்ற பெயர்களாகத் தொடர்கிறது. நாய்கன் என்பதும் தனவைசியரைக் குறித்ததே என்று பிங்கல நிகண்டும் (5-52) சொல்கிறது.
  
பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பெரும் முதலீட்டில் தொழில் செய்யும் தனவணிகர்களுக்கு சினம் தவிர்த்தலும் இடத்திற்கேற்ப நடத்தலும் (முனிவிலனாதலும் இடனறிந்து ஒழுகுதலும்) எனும் தனிப் பண்புகளோடு, போரற்ற அமைதியான சூழல் எனும் புறத்தேவையும் இன்றியமையாதது. எனவே அக்காலத்தில் அமைதியை வலியுறுத்திய ஜைனமும் பௌத்தமும் இவர்களுக்கேற்றதாகியிருந்ததை ஊகிக்கலாம். முடியுடை மூவேந்தரும் சினந்து பொருதுவதைக் கொண்டாடிய சங்ககாலம் முடிந்து, மூவேந்தரும் ஒற்றுமையாய் இருப்பதான சித்திரத்தை சிலப்பதிகாரம் முன்வைக்கிறது. இளங்கோ ஜைனத் துறவி எனப்படுவது மட்டுமல்ல, தனவணிக குலத்தாரைத் தலைமக்களாகக் கொண்ட காப்பியம் இது என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.

தொடக்க கால ஜைனமும், தொடக்க கால பௌத்தமும் முறையே பிராகிருத மொழிகளான அர்த்த மாகதியையும், பாலியையும் பனுவல் மொழிகளாகக் கொண்டிருந்தன. பிற்கால ஜைனமும் பௌத்தமுமே சம்ஸ்கிருதத்தைப் பனுவல் மொழியாகக் கொண்டன. ஆகவே இச்சமயங்களைப் பின்பற்றிய அல்லது தாக்கம் கொண்டிருந்த, இச்சமயங்களுக்குப் பெரும் உதவி புரிந்த வணிகக் குலத்தாரின் பட்டத்தை இம்மொழிகளோடு தொடர்புடையதாக ஊகிக்கலாம்.

செட்டி (Setthi) எனும் சொல் செட்ட/சேட்ட (Settha) என்ற சொல்லின் அடியொற்றியது என்கிறது பாலி அகராதி. பிராகிருத மொழிகளில் எ, ஏ எனத் தனி ஒலிக்குறிகள் இல்லை. சில இடங்களில் குறில் எ-காரமாகவும், சில இடங்களில் நெடில் ஏ-காரமாகவும் ஒலிக்கும். செட்ட/சேட்ட எனும் சொல்லுக்குச் சிறந்த (Best), தலைசிறந்த (Excellent) என்றும், செட்டி/சேட்டி எனும் சொல்லுக்குத் தலைமகன் (foreman of the guild), வங்கியாளன் (Banker), நகரத்தவன் (City Man), வளமான வணிகன் (Wealthy Merchant) என்றும் பொருள் தருகிறது. இவையாவும் தனவணிகர் குலத்தைக் குறிப்பதாகவே இருப்பதைக் காணமுடிகிறது.  செட்ட/சேட்ட எனும் பிராகிருத/பாலிச் சொல்லுக்கு இணையான சம்ஸ்கிருதச் சொல் ஸ்ரேஷ்ட என்பதாகும். இதன் பொருளும் சிறந்த (Best), மதிக்கத்தகக் தலைவன் (Respectable Leader) என்பதேயாகும்.

செட்டி (Setthi) எனும் சொல் தமிழ் வழக்கில் செட்டி (Chetti) என்றும் ஒலிக்கப்படுகிறது. இதே போன்று கருநாடக/ஆந்திர தனவணிகக் குலங்கள் ஷெட்டி (Shetti) என்றும், குஜராத்/ராஜஸ்தான் தனவணிகக் குலங்கள் சேட் (Setth) என்றும் அழைக்கப்படுகின்றன.

தொடக்கத்தில் தனவணிகரையே குறிப்பதாக இருந்த செட்டி எனும் பட்டத்தை நாளடைவில் பல்வேறு வணிகக் குலங்களும் பூண்டுள்ளனர் என்பதை ஊகிக்கமுடிகிறது.

- யுவபாரதி

உசாத்துணை :

1) பிங்கல நிகண்டு / மதறாஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, சென்னை /1917
2) Pali - English Dictionary / Pali Text Society, London / 1921

2 comments:

அன்பரசு said...

கண்ணகி மீனவ பெண், சிலப்பதிகார பாடல் தெளிவாக சொல்கிறது. கடல் புகு உயிர் கொன்று வாழ்வார்கள் உன் ஐயன்கள் என்று கண்ணகியை பார்த்து கோவலன் படுகிறான்.

பட்டணம் செட்டியார் said...

கண்ணகி மீனவ பெண். பொய் வரலாறு வேண்டாம்