February 15, 2014

அறுந்த செருப்பு

செருப்புக்கு உயிருண்டா. பல்லாண்டு காலணிந்தார் அறியார். தானாய் எங்கும் செல்வதை மறந்த உயிர்தான் செருப்பாகும். தன்னை அணிந்தவரை மட்டும்தான் அதற்குத் தெரியும். அணிந்தவருக்காய்த் தேயும் தேயும். அறுந்தாலும் இன்னும் அணிந்து தேய தேம்பும். 

ஆனால், செருப்பு அறுந்ததுமே அணிந்தவருக்குத் தெரிந்திருக்கும் இனி பயணத்திற்கு உதவாதென. அறுந்தது வீட்டிலெனில் வீட்டு மூலையிலோ தெருவிலெனில் தெருவோரத்லோதான் கிடக்கவேண்டும் செருப்பு. 

பயணித்தேன் தேய்ந்தேன் அறுந்தேன் கிடக்கிறேன் என காலடிக்கு ஊர்ந்து வந்து கதறினாலும் அணிந்தவர் காதிலோ கவனத்திலோ புகும் வலுவற்றது அதன் குரல். சற்றே சன்னமாகக் கேட்டாலும் கதவோரம் எத்தி எறியவும் முடியும். பயணத்திற்கென அணிந்ததெல்லாம் பயணித்ததாகுமா. 

அணிந்தவர் மனிதரெனில் அவருக்குக் கேட்பதென்பது சக மனிதரின் குரலும் துயரமும் மகிழ்வும்தான். பிணக்கமும் இணக்கமும் கூட சகமனிதருக்குள்தான். தானும் மனிதனாயிருந்த நினைவெழப் புலம்பினாலும் வெகுகாலம் செருப்பு செருப்புதான். 

அதுவும் இப்போது அணிய உதவாத அறுந்த செருப்பு.

- யுவபாரதி

No comments: