June 16, 2013

கம்பன் சிந்தனை – 7 : நேசத்தால் நிறைந்த நெஞ்சள்

மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பறவை, விலங்கு, மனிதர் என்று எல்லா உயிரினங்களிலும் நேசம் எனும் சொல்லுக்குப் பெரிதும் இலக்கணமாகக் கொள்ளப்படுபவள் தாய். இறை நம்பிக்கையாளர்களும் இறைவனை எத்தனை பேர் கொண்டு அழைத்தாலும் அம்மையே அப்பா என்றோ, தாயுமானவா என்றோ சொல்கிற போது கொள்ளும் அச்சமின்மையும், அன்புமிகுதியும், உரிமை கொள்ளலும் பிற பேர்களில் வருவதில்லை. அன்னையரில் விதிவிலக்குகள் வெகுசொற்பம்.

கம்பனால்  ‘நேசத்தால் நிறைந்த நெஞ்சள்’ என்ற சொல்லால் ஆளப்பட்டிருப்பவள் ஒரு தாய். அவள் மண்டோதரி. அசுர சிற்பியாகிய மயனின் மகள். இராவணனின் பட்டத்தரசி. இந்திரசித்தன் எனப்படும் மேகநாதனின் தாய்.

சீதை, திரௌபதி, அகலிகை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து அன்னையரை (பஞ்சமாதர்) நாள்தோறும் நினைத்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம் என்று பொருள்படும் சுலோகம் ஒன்று வடமொழியில் இருப்பது நினைவிற்கு வருகிறது. தன் தாய் பட்டினியில் கிடக்க, அதைக் கண்டும் காணாது தான் மட்டும் வயிறாற உண்டு உறங்கி உயிர்த்து வாழும் மகவு, பிற எந்தத் தாயை நினைத்தாலும் பணிந்தாலும் எந்தப் புண்ணியமில்லை. நமக்கு இந்த உலகம் நம் அன்னை தந்தது. நிற்க.

யுத்த காண்டம் இராவணன் சோகப் படலத்தில் பத்தே பத்துப் பாடல்களில்தான் சொல்லப்படுகிறது மண்டோதரி தன் மகனது உடல் மேல் வீழ்ந்து புலம்பும் காட்சி. போர்க்களத்திலிருந்து மைந்தன் உடலைச் சுமந்து வந்து, அரண்மனையில் கிடத்துகிறான் இராவணன். தவமிருந்து பெற்ற பிள்ளையின் உடல் தலையற்றுக் கிடக்கிறது. ‘தாய்க்குத் தலைப்பிள்ளை, தந்தைக்கு இளையபிள்ளை’ என்பார்கள். இன்னின்னார்க்கு ஈமக்கடன் செய்ய உரிமை பெற்றோர் இவரிவர் என்பதால் மட்டுமல்ல, பிள்ளைகள் மீது பெற்றோர் காட்டும் அன்பின் சிறு வேறுபாட்டிலும் இது பொருந்தும் என்பார்கள்.

கருங்குழல் கற்றை கால்தொட, கைகளால் முலைமேல் கொட்டியபடி ஓடி வருகிறாள் மயன்மகள்.

தலையின்மேல் சுமந்த கையள் தழலின்மேல் மிதிக்கின்றாள் போல்
நிலையின்மேல் மிதிக்கும் தாளள் நேசத்தால் நிறைந்த நெஞ்சள்
கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங்கணை உயிரைக் கொள்ள
மலையின்மேல் மயில் வீழ்ந்தென்ன மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்.

தலையின் மேல் கூப்பிக் கோர்த்த கைகளை உடையவளாய், நெருப்பின் மேல் நிற்பது போல நிலத்தின் மேல் நிற்கும் கால்களை உடையவளாய், வேடன் கணைபட்டு உயிர் துறந்து மலைமீது வீழ்ந்த மயிலைப் போல, நேசத்தால் நிறைந்த நெஞ்சையுடைய மண்டோதரி தன் மகன் உடல் மீது வீழ்கிறாள்.

உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிரிலள் கொல்லோ! என்னப்
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் விம்மி யாதும்
வியர்த்திலள் நெடிது போது விம்மலள் மெல்ல மெல்ல
அயர்த்தனள் அரிதின் தேறி வாய்திறந்து அரற்றல் உற்றாள்.

மூச்சில்லை. உணர்வில்லை. உயிர் விட்டாளோ! என்று நினைக்கும்படி உடலில் ஓர் அசைவுமில்லை. ஒரு வார்த்தை வரவில்லை. விம்மி வியர்க்கவில்லை. வெகுநேரம் இப்படிக் கிடந்தாள். மெல்ல மெல்ல உணர்வு கூடி பெருமூச்சு விடுகிறாள். பின் தெளிந்து, வாய்திறந்து புலம்பத் தொடங்குகிறாள்.

அமாவாசை எனப்படும் கார்உவா தொடங்கி, பௌர்ணமி எனப்படும் வெள்உவா நாள் வரை பதினாறு நாட்கள். அமாவாசையன்று ஒரு கலையோடு இருக்கும் சந்திரன், நாளும் ஒரு கலை கூடி, பௌர்ணமியன்று பதினாறு கலைகளும் கூடி முழுநிலவாய்ப் பொலிகிறான் என்பர். அப்படிக் ‘கலைகள் ஒவ்வொன்றாய்க் கூடி வளரும் உன் இளம்பருவத்திலேயே – பதினாறு வயதிற்கு முன்பே – உன் வில்லாற்றலால் இந்திரனையே வெல்லக் காண முன்பு ஓர் தவம் செய்தேன். ஆனால், தலையிலா யாக்கை காண எத்தவம் செய்தேன்? அந்தோ!’ என்று புலம்புகிறாள் மண்டோதரி.

‘கால்களில் சலங்கை கட்டித் தவழும் பருவத்திலேயே, இரண்டு சிங்கங்களைக் கொணர்ந்து வந்து, அவற்றை ஒன்றையொன்று மோதச் செய்து, மாடத்தில் சிரித்து ஆடிய விளையாட்டை இனி எப்படிக் காண்பேன்? முக்கண்ணன் முதலான கடவுளரையும், மூன்று உலகத்தையும் வென்ற என் பிள்ளையை மானிடரில் ஒருவன் கொல்ல மாண்டு போனானே! உயர்ந்து நிற்கும் மேருமலையை அணு ஒன்று உதைத்தது போலானதே! அம்மா!’ என அரற்றுகிறாள்.

அம்புலி! அம்ம வா! என்று அழைத்தலும் அமர்வெண்திங்கள்
இம்பர் வந்தானை அஞ்சல் எனஇரு கரத்தில் ஏந்தி
வம்புறும் மருவைப் பற்றி முயல்என வாங்கும் வண்ணம்
எம்பெருங் களிறே! காண ஏசற்றேன், எழுந்திராயோ!

‘வானில் கண்ட சந்திரனை அருகே வா என்று நீ அழைத்ததும் பூமிக்கு இறங்கி வந்தான் அவன். அஞ்சவேண்டாம் எனக் கூறி இரு கைகளிலும் ஏந்தி, அவன் மீது இருக்கும் மருவை முயல் என்று எண்ணிப் பற்ற முயன்றாயே! என் கண்ணே! களிறே! என்னால் தாங்கமுடியவில்லை. எழுந்திரு!’

எத்தனை பெரிய வீரனும் எந்த வயதிலும் தன் தாய்க்குச் சிறு பிள்ளைதான். மேகநாதன் இளம் வயதிற்கே உரிய அழகிய அறியாமையால் திங்களின் மருவை முயல் என நினைந்து பற்றி இழுத்ததும், சிங்கங்களைப் பற்றிக் கொணர்ந்து அவற்றின் மோதலைப் பார்த்து கைகொட்டிச் சிரித்ததும், தன் வில்லாற்றலால் இந்திரனை வென்றதும் மண்டோதரியைப் பொருத்தவரை தன் மகனின் பிள்ளை விளையாட்டுதான். தேவரையும் மூவரையும் வென்ற தன் பிள்ளை, மானிடரில் ஒருவனால் வீழ்ந்துபட்டுத் தலையற்றுக் கிடப்பதைக் காண முடியவில்லை அவளால்.

இறுதியில் சொல்கிறாள் மண்டோதரி. மிகவும் புகழ்பெற்ற பாடல் இது.

பஞ்சுஎரி உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டது இல்லை
அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை என்று அமுதால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றே.

‘தீப்பட்ட பஞ்சு போல அரக்கர்தம் கடல் போன்ற படைகளெல்லாம், கடும் கோபம் கொண்ட மனிதர்கள் கொல்ல அழிந்துவிட்டதே. மீளவே இல்லையே. முன்பும் அஞ்சினேன். இப்போதும் அஞ்சுகிறேன். அந்த சீதை எனும் அமுதால் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தனான இராவணனுக்கும் நாளை இந்நிலைதானே வரும்?’

-    யுவபாரதி

No comments: