February 27, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-3)

துளுவப் பரம்பரையில் கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகர ஆட்சிக்கட்டில் ஏறியவர் அவரது இளைய தம்பி அச்சுதராயர் (கி.பி.1530-1542). அவரை அடுத்து கி.பி.1542-இல் அரசரான அவரது மகன் முதலாம் வேங்கடவர் கொல்லப்பட்டு, கிருஷ்ணதேவ ராயரின் மற்றொரு தம்பி மகனான சதாசிவராயர் அரசரானார்.
 
இன்றைய விஜயநகரம்  (ஹம்பி)
 சதாசிவராயர் காலத்தில் அமைச்சர் இராமராயரே பகர ஆளுநராய் (Regent) இருந்தார். சதாசிவராயர் பெயருக்கு மட்டுமே அரசர். இவர் காலத்தில்தான் (தற்போது மராட்டிய மாநிலத்திலுள்ள) ஆமதுநகர் மற்றும் பீரார், (தற்போது கருநாடக மாநிலத்திலுள்ள) பீஜப்பூர், (தற்போது ஆந்திர மாநிலத்திலுள்ள) கோல்கொண்டா மற்றும் பீடார் ஆகிய ஐந்து நாடுகளின் சுல்தான்களும் ஒன்றுசேர்ந்து கிருஷ்ணா நதிக்கரையிலிருந்த  (இராட்சசி-) துங்கிடி என்னுமிடத்தில் நடந்த  போரில் விஜயநகரப் படைகளை வீழ்த்தினர். தலைக்கோட்டைப் ​போர் எனப்படும் 1565 ஜனவரி 23 அன்று முடிந்த இப்போரின் முடிவில் விஜயநகர அமைச்சர் - ஆளுநர் இராமராயர் சிறைப்படுத்தப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது. இராமராயரின் தம்பி திருமலைராயரின் உதவியோடு சதாசிவராயர் வடபெண்ணை நதிக்கரையை ஒட்டியிருந்த பெனுகொண்டாவிற்குத் தப்பிவிட்டார். அதுமுதல் விஜயநகரப் பேரரசின் தலைநகராக பெனுகொண்டா ஆனது. சுல்தான்களின் படைவீரர்கள் விஜயநகரத்தை முழுவதும் அழித்து எரியூட்டினர்.

அவ்வப்போது தன்னாட்சி பெற விழைந்து பேரரசை எதிர்த்து வந்த - பேரரசின் சார்பில் செஞ்சியிலும் தஞ்சையிலும் மதுரையிலும் ஆட்சி புரிந்த - நாயக்கர்கள் தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தித் தத்தம பகுதிக்குத் தங்களையே முற்றுரிமை பெற்ற மன்னரகளாக முடிசூட்டிக் கொண்டனர்.

கி.பி.1570-இல் பெயரளவில் அரசரான சதாசிவராயரைச் சிறையிலிட்டுவிட்டுத் தானே விஜயநகர அரசரானார் திருமலைராயர். அவரது பரம்பரையே அரவீட்டுப் பரம்பரை எனப்படுகிறது. இவரது மகன் ஸ்ரீரங்கரும் பெனுகொண்டாவிலிருந்தே அரசாண்டார். ஸ்ரீரங்கனை அடுத்து ஆட்சிக்கட்டிலேறிய அவரது தம்பி இரண்டாம் வேங்கடவர் (கி.பி.1586-1614) காலத்தில் கி.பி.1601-இல் இராயர் சாம்ராச்சியத்தின் தலைநகரானது வட ஆற்காட்டு வேலூர். அதனாலேயே இவ்வேலூரை இன்றும் இராயவேலூர் என்கின்றனர்.

மூன்றாம் வேங்கடவர் அரசராக இருந்த காலத்திலேயே கி.பி.1639-இல் இவரிடமிருந்து சென்னையைக் குத்தகைக்கு எடுத்து புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர். விஜயநகர அரசின் கடைசி அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கர். கி.பி.1649-இல் வேலூர் பீஜப்பூர் சுல்தானால் வெற்றி கொள்ளப்பட்டதோடு விஜயநகரப் பேரரசு முடிவுற்றது. பீஜப்பூர் சுல்தானை ஸ்ரீரங்கர் மீது படையெடுக்கத் தூண்டியவர் அப்போது மதுரையை ஆண்ட திருமலை சவுரி நாயினு அய்யிலுகாரு எனப்படும் திருமலை நாயக்கர் என்பது குறிப்பிடத் தக்கது. பெருந் துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் ஆட்சிப் பறிப்புக்கும் கைப்பற்றலுக்கும் பெயர்பெற்றது விஜயநகரப் பேரரசு.

(நாயக்கர் ஆட்சியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அதன் முன்வரலாறாக மிகச் சுருக்கமாகவே விஜயநகரப் பேரரசின் வரலாறு இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது.)

பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே தமது தோற்றுவாயான ஆந்திர - கருநாடகப் பகுதிகளில் தம் ஆட்சியை இழந்தாலும், தமிழகத்தில் மட்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை நாயக்கர்கள் தம் ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்டனர் என்பதும்,ஆங்கிலேயர் காலத்திலும் ஜமீன்தார்களாக இருந்து தொடர்ந்து ஆண்டனர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

விஜயநகர ஆட்சிக் காலத்தில் தெலுங்கு, கன்னட, சமஸ்கிருத மொழிகள் பெரும் வளப்பமுற்றன என ஏற்கனவே குறிப்பிட்டோம். செஞ்சியிலும் தஞ்சையிலும் மதுரையிலும் ஆட்சி புரிந்த நாயக்கர்களின் வரலாற்றில் புகும் முன் விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே இம்மொழிகளில் இயற்றப்பட்ட நூல்களைக் காண்போம்.

தெலுங்கு நூல்கள்:

. எண் - நூலின் பெயர் - ஆசிரியர் - பொருள்

1 தெலுங்கு பாரதம் - எர்ரப் பிரகதா - மகாபாரதம்
2 லக்ஷ்மீ நரசிம்ம புராணமு - எர்ரப் பிரகதா - புராணம்
3 தெலுங்கு ராமாயணம் - எர்ரப் பிரகதா - இராமாயணம்
4 ஹரிவம்சமு - எர்ரப் பிரகதா - வைணவ புராணம்
5 தெலுங்கு நைஷதம் - ஸ்ரீநாதன் - நளன் கதை
6 ஹர விலாசமு - ஸ்ரீநாதன் - சிவன் பெருமை
7 தெலுங்கு பாகவதம் - போதனன் - பாகவதம்
8 வீரபத்ர விஜயமு - போதனன் - வீரபத்திரர் கதை
9 ஜைமினி பாரதம் - நரசிம்ம ராயரால் ஆதரிக்கப்பட்ட வீரபத்ரன் - பாரதம்
10 சிருங்கார சாகுந்தலமு - வீரபத்ரன் - சகுந்தலை கதை
11 கவிகர்ண ரசாயனமு - நரசிம்ம கவி - கவிதை
12 பசவ புராணமு - பக்தி சோமநாதன் - வீரசைவ பசவண்ணர் கதை
13 ஹயலக்ஷண சாஸ்திரமு - மனுமஞ்சி பட்டர் - குதிரை நூல்
14 ராஜசேகர சரித்ரமு - மல்லண்ணா - வரலாறு
15 பிரபாவதி பிரத்யும்னமு - சூரண்ணா - புராணம்
16 கலா பூர்ணோயதமு - சூரண்ணா - புராணம்
17 ராகவ பாண்டவ்யமு - சூரண்ணா - இராமாயணம் மற்றும் மகாபாரதம்
18 பாரிஜாதாபஹரணமு - நந்தி திம்மண்ணா - புராணம்
19 மனுசரிதா - அல்லசாணி பெத்தண்ணா - புராணம்
20 சகல கதாசார சங்கிரஹா - ராமபத்ரன் - கதைத் தொகுதி
21 ராமாப்யுதயமு - ராமபத்ரன் - இராமாயணம்
22 காளஹஸ்தி மகாத்மியமு - தூர்ஜடி - காளத்தித் தல வரலாறு
23 காளஹஸ்தீசுவர சதகமு - தூர்ஜடி - காளத்தி சிவன் பெருமை
24 வசு சரிதமு - ராமராஜ பூஷணன் - புராணம்
25 ஹரிச்சந்திர நளோபாக்கியானமு - ராமராஜ பூஷணன் - அரிச்சந்திரன் நளன் கதை
26 பாண்டுரங்க மகாத்மியமு - தெனாலி ராமகிருஷ்ணா - பண்டரிபுரத்தின் பெருமை
27 நிரங்குசோபாக்கியானமு - ருத்ரய்யா - புராணம்
28 ஆமுக்த மால்யதா - கிருஷ்ண தேவராயர் - ஆண்டாள் கதை

(வ. எண் 14 முதல் 26 வரையிலான நூலாசிரியர்கள் கிருஷ்ண தேவராயரதுஅவையில் இருந்த அஷ்டதிக் கஜங்கள் (எண்திசை யானைகள்) எனப்பட்டவர்கள்.)

கன்னட நூல்கள்:

வ. எண் -நூலின் பெயர் - ஆசிரியர் பொருள்

1 தர்மநாத புராணம் - இரண்டாம் அரிகரன், முதலாம் தேவராயரால் ஆதரிக்கப்பட்ட மதுரா - 15ஆம் சைனத் தீர்த்தங்கரர் கதை
2 ரத்ன காண்டகா - அயதாவரா - சைனக் காப்பியம்
3 தர்ம பரீட்சா - விருத்த விலாசன் - சைன நூல்
4 சாஸ்திராச்சாரம் - விருத்த விலாசன் - சைன நூல்
5 காவிய சாரா - அபினவவாதி வித்யானந்தஎ - சைனத் தொகை நூல்
6 சைன பாரதா - சாளுவன் - மகாபாரதம்
7 பரதேசுவர சரிதா - ரத்னாகர வர்ணி - பரதச் சக்கரவர்த்தி சைனரான கதை
8 அபராஜித சதகா - ரத்னாகர வர்ணி - சைன நீதி நூல்
9 புஜபலி சரித்ரா - பஞ்ச பாணன் - சிரவணபெலகுளா கோமதீசர் சிலை நிறுவல்
10 பசவ புராணம் - பீம கவி - வீர சைவ சமயாசிரியர் பசவண்ணா கதை
11 சிவ தத்துவ சிந்தாமணி - இரண்டாம் தேவராயரால் ஆதரிக்கப்பட்ட லக்ஷ்மண தண்டநாதன் - வீர சைவத் தத்துவ நூல்
12 பிரபு லிங்க லீலா - சாமரசன் - வீர சைவ வரலாறு
13 பிரெளடராய சரிதா - அதிரிஸ்யா - வீர சைவ அடியார் கதை
14 சட்ஸ்தல ஞானாமிருதம் - அதிரிஸ்யா - வீர சைவ நூல்
15 சிவயோக பிரதீபிகா - நிஜகுண சிவயோகி - வீர சைவ தத்துவ விரிவுரை
16 விவேக சிந்தாமணி - நிஜகுண சிவயோகி - வீர சைவக் கதைகள்
17 வீர சைவாம்ருதம் - கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்ட மல்லனார்யா - சிவனது திருவிளையாடல்
18 சத்யேந்திர சோளகதா - மல்லனார்யா - சிவ மந்திர மாண்பு
19 சர்வஞ்ஞன பதகளு - சர்வஞ்ஞன் - நீதி நூல்
20 கன்னட ராமாயணா - கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்ட நரஹரி - இராமாயணம்
21 கன்னட பாகவதா - சாடு விட்டலநாதன் - பாகவதம்
22 புரந்தரதாசர் கீர்த்தனகளு - அச்சுதராயரால் ஆதரிக்கப்பட்ட புரந்தரதாசன் - வைணவக் கீர்த்தனைகள்
23 மோகன தரங்கிணி - கனகதாசன் - கண்ணன் கதை
24 நளசரிதா - கனகதாசன் - நளன் கதை
25 ஹரிபக்திசாரா - கனகதாசன் - வைணவ பக்திநூல்
26 ராமதான்ய சரிதா - கனகதாசன் - கேழ்வரகு வரலாறு

சமஸ்கிருத நூல்கள்:

வ. எண்- நூலின் பெயர் - ஆசிரியர் - பொருள்

1 மதுரா விஜயம் - குமார கம்பணர் மனைவி கங்கா தேவி - குமார கம்பணரின் தமிழக வெற்றி
2 ஜாம்பவதீ கல்யாணம் - கிருஷ்ண தேவராயர் - புராணம்
3 உஷா பரிமளம் - கிருஷ்ண தேவராயர் - புராணம்
4 வேதப் பிரகாசம் - இரண்டாம் அரிகரரின் அமைச்சர் சாயனன் - ரிக் வேத விரிவுரை
5 நியாயாம்ருதம் - கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்ட வியாசராயன் - அத்வைதத் தத்துவ விளக்கம்
6 சாத்வீக பிரம்மவித்யா விலாசம் - முதலாம் வேங்கடவரின் ஆசிரியர் தாதாச்சாரியர் - வைணவத் தத்துவம்
7 பாண்டுரங்க மகாத்மியம் - தாதாச்சாரியர் - பண்டரிபுர இறைவன் கண்ணனின் மாட்சிமை
8 தெய்வக்ஞ விலாசம் - கொண்டவீட்டு லக்ஷ்மீதரன் - கலைக் களஞ்சியம்
9 சங்கீத சூரியோதயம் - லக்ஷ்மீ நாராயணா - இசை நூல்
10 சாலுவாப்யுதயம் - அச்சுதராயரின் அவைப் புலவர் இராஜநாத திண்டிமா - பரம்பரையின் எழுச்சியும் ஆட்சியும்
11 பாகவத சம்பு - இராஜநாத திண்டிமா - புராணம்
12 அச்யுத ராயாப்யுதயம் - இராஜநாத திண்டிமா - அச்சுதராயரின் பெருமை
13 வரதாம்பிகா பரிநிர்ணயம் - அச்சுதராயரின் அவைப் புலவர் திருமலாம்பா - அச்சுதராயர்-வரதாம்பா திருமணம்

- யுவபாரதி 

(அடுத்தது)

No comments: